குவாந்தான், ஜூலை 15 - இல்லாத இணைய முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்த ஹோட்டல் சேவை நிர்வாகி ஒருவர் 211,000 வெள்ளியைப் பறிகொடுத்தார்.
அதிக வருமானம் தருவதாக உறுதியளிக்கும் முதலீட்டுத் திட்டம் தொடர்பான விளம்பரத்தை 49 வயதான அந்த நபர் முகநூலில் கண்டதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
அதன் பின்னர் அந்த நிர்வாகி வாட்ஸ்அப் செயலி மூலம் பெண்மணி ஒருவரைத் தொடர்பு கொண்டுள்ளார். முதலீட்டில் பங்கேற்பதற்கான இணைப்பு பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஜூன் 4 முதல் 11 வரை தனது சேமிப்பைப் பயன்படுத்தி இரண்டு கணக்குகளுக்கு ஆறு பண பரிவர்த்தனைகளைச் செய்தார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும், கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருந்ததோடு முதலீட்டில் எந்த வருமானமும் கிடைக்காததால் தாம் ஏமாற்றப்பட்டதை அந்த நபர் உணர்ந்தார்.
இதன் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் நேற்று குவாந்தான் மாவட்டக் காவல் தலைமையகத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது என யாஹாயா தெரிவித்தார்.


