அலோர் காஜா, ஜூலை 15 - கடந்த இரு தினங்களில் நான்கு இடங்களில் குற்றவியல் மிரட்டல்கள் விடுத்தது மற்றும் கத்தியைக் காட்டி கொள்ளையிட்டது ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் 'ஓப் கெசான்' சோதனை நடவடிக்கையை முடுக்கிவிட்ட தமது தரப்பு, நேற்று காலை சுமார் 11.15 மணியளவில் கெலேமாக்கில் 40 வயதுடைய அந்த நபரை வெற்றிகரமாகக் கைது செய்ததாக அலோர் காஜா மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஷாரி அபு சமா கூறினார்.
தாமான் முதியாராவில் உள்ள ஒரு மினி மார்க்கெட்டில் அச்சந்தேக நபர் குற்றவியல் மிரட்டல் விடுத்தது தொடர்பில் நேற்று முன்தினம் இரவு 11.39 மணிக்கு காவல்துறைக்கு முதல் புகார் கிடைத்ததாக அவர் சொன்னார்.
சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அந்த நபர் கெலேமாக்கில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தின் கண்ணாடி கதவில் கல்லை எறிந்துள்ளார். பின்னர் முகப்பிட ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதோடு வளாகத்தில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிளோட்டியைத் தாக்கியதாகவும் நம்பப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமின்றி, அந்த சந்தேக நபர் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் அலோர் காஜா நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கத்தியைக் காட்டி குற்றவியல் மிரட்டலை விடுத்து கொள்ளையிட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த நபர் பயன்படுத்திய ஆயுதத்தை போலீசார் கைப்பற்றிய வேளையில் சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளைப் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது என அவர் கூறினார்.
அந்த நபருக்கு போதைப்பொருள் உள்ளிட்ட ஆறு குற்றப்பதிவுகள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 506, பிரிவு 394 மற்றும் பிரிவு 392 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.


