ஷா ஆலம், ஜூலை 15 - லைசென்ஸ் நிபந்தனைகளை மீறியதோடு செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திய சந்தேகத்தின் பேரில் உள்நாட்டு பி பிரிவு மீன்பிடி படகு ஒன்றை மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் சிலாங்கூர் பிரிவு தடுத்து வைத்தது.
நேற்று முன்தினம் பின்னிரவு 1.00 மணியளவில் கப்பார் கடல் பகுதிக்கு மேற்கே 3.6 கடல் மைல் தொலைவில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது அந்த படகு தடுத்து நிறுத்தப்பட்டதாக சிலாங்கூர் கடல்சார் இயக்குநர் கேப்டன் அப்துல் முஹைமின் முகமது சாலே கூறினார்.
அந்த படகின் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 55 வயதான உள்ளூர்வாசி மற்றும் 41 வயதான மியான்மர் நாட்டவர் ஆகிய இரு பணியாளர்களின் பெயர்களும் படகின் உரிமத்தில் பட்டியலிடப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
மேலும், அச்சோதனையில் மியான்மர் நாட்டவர் எந்த செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார். இது தவிர மலேசிய மீன்வள தலைமை இயக்குநரின் பணி அனுமதி அல்லது அங்கீகாரக் கடிதமும் அவர்களிடம் இல்லை என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட படகு மற்றும் அதன் பணியாளர்கள் பூலாவ் இண்டா கடல் போலீஸ் படகுத் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் நடவடிக்கைக்காக சிலாங்கூர் மலேசிய கடல்சார் புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர் என அப்துல் முஹைமின் தெரிவித்தார்.


