ஜோகூர் பாரு, ஜூலை 15 - டேசா செமர்லாங்கில் உள்ள தொழிலாளர் விடுதியில் கடந்த சனிக்கிழமை மாற்றுத் திறனாளி டாக்சி ஓட்டுநர் கத்தியால் குத்தப்பட்டச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக மூன்று வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் டேசா செமர்லாங்கில் உள்ள தொழிலாளர் தங்கும் விடுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் சுஹைமி இஷாக் தெரிவித்தார்.
அந்த மூன்று சந்தேக நபர்களும் விசாரணைக்காக எதிர்வரும் வியாழக்கிழமை வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் நேற்றிரவு பெர்னாமாவிடம் தெரிவித்தார் .
இச்சம்பவத்தில் டாக்சி ஓட்டுநரான முகமது ஜூல்கிப்ளி மைடின் (வயது 40) அடிவயிற்றிலும் இடது தொடையில் கத்தியால் குத்தப்பட்டார். மேலும் தாக்குதலின் போது அவரது இடது மணிக்கட்டிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


