ஷா ஆலம், ஜூலை 14- உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசாவில் இன்று காலை ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர்.
காலை 11.00 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 57 வயது நபர் ஓட்டிச் சென்ற அந்த பேருந்து வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் கூறினார்.
இச்சம்பவத்தில் 38 வயது தாய் மற்றும் அவரது ஒன்பது வயது மகன் ஆகிய இருவரும் லேசாக காயமடைந்தனர் இருப்பினும், சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு காயம் ஏற்படவில்லை.
காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக கோல குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 17 வயதான மற்றொரு பயணிக்கு காயம் ஏற்படவில்லை என்று அகமது முக்லிஸ் முக்தார் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இவ்விபத்து தொடர்பில் இன்று காலை 11.16 மணிக்கு தமது துறைக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து புக்கிட் செந்தோசா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் அங்கு விரைந்ததாக அவர் கூறினார்.


