கோலாலம்பூர், ஜூலை 14- இவ்வாண்டு மே மாதம் 1ஆம் தேதி தொடங்கி கோழி முட்டைகளுக்கான மானியத்தில் ஐந்து விழுக்காடு குறைக்கப்பட்ட போதிலும் அந்த உணவுப் பொருளின் விநியோகம் சந்தையில் நிலையாகவும் மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு போதுமனதாகவும் இருக்கிறது.
உதவித் தொகை குறைப்பு கோழி முட்டை விநியோகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இது நிரூபிக்கிறது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
உள்நாட்டு உற்பத்தி முறை நிலையான வளர்ச்சியைக் கண்டு வருவதோடு சீராகவும் இருப்பதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
கோழி முட்டைக்கான விலை கட்டுபாடு அகற்றப்படும் என்ற அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது. இதன் வழி மே மாதம் தொடங்கி முட்டைக்கான உதவித் தொகை 10 காசிலிருந்து ஐந்து காசாக குறைக்கபட்டது. இந்த உதவித் தொகை வரும் ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி முழுமையாக நிறுத்தப்படும்.
முட்டை உற்பத்தி போதுமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் அத்தொழில்துறை கொண்டுள்ள கடப்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவினை அரசாங்கம் எடுத்ததாக அமைச்சு கூறியது.
முட்டை உற்பத்தித் துறையின் நீண்டகால ஆக்கதன்மைக்கும் நாட்டின் நிதி நிலைக்கும் பொருத்தமற்றதாக இருக்கும் காரணத்தால் விலைக்கட்டுப்பாடு மற்றும் உதவித் தொகை போன்ற திட்டங்களை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது என் அமைச்சு தெரிவித்தது.


