ஈப்போ, ஜூலை 14- தாப்பா அருகே, ஜாலான் பகாங், கம்போங் பத்து 23 இல் சாலையோரம் உள்ள ஒரு பள்ளத்தில் நேற்று ஒரு ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் போலீசார் அதனை கொலை வழக்காக வகைப்படுத்தியுள்ளனர்.
ஈப்போவில் உள்ள ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் நேற்று காலை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் முடிவுகளைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு கனமானப் பொருளால் தாக்கப்பட்டதே காரணம் என்பது கண்டறியப்பட்டதாக தாப்பா மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் ஜோஹாரி யஹ்யா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் தலை, முகம், மார்பு, உடலின் பின்புறம் மற்றும் இரு கைகளிலும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் காணப்பட்டன. மேலும் மழுங்கிய ஆயுதத்தால் தாக்கப்பட்டது உட்பட உடலில் ஏற்பட்ட காயங்களால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஜோஹாரி கூறினார்.
டி-சட்டை மற்றும் கருப்பு அரைக்கால் சிலுவார் அணிந்திருந்த
நிலையில் சாலையோரத்தில் 15 மீட்டர் உயரமான பாறைக்கு அடியில் கண்டு பிடிக்கப்பட்ட
அந்த நபரின் உடலை அடையாளம் காண கைரேகைகளை போலீசார் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


