பெட்டாலிங் ஜெயா, 14 ஜூலை - 2024ஆம் ஆண்டு இணைய பாதுகாப்புச் சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி, விதிமுறைகள் மற்றும் குறியீடுகள் உட்பட 10 துணை முறையாவணங்களை அடையாளம் கண்டுள்ளது.
தற்போது அந்த முறையாவணங்கள், பல்வேறு மேம்பாட்டு நிலைகளில் இருப்பதாகவும், சட்ட நோக்கத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்ய,தேவையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
மலேசிய உற்பத்தித்திறன் கழகம் MPC-இன் ஒழுங்குமுறை பகுப்பாய்வின் முடிவுகளைப் பொறுத்து, அந்த விதிமுறைகளுக்கான வளர்ச்சி அடங்கியிருக்கிறது.
அதோடு, தேசிய சட்டத்துறையிடமும் ஒப்புதலும் பெறப்படும் என்றும் தியோ நீ சிங் கூறினார்.
"2025-ஆம் ஆண்டு இணைய பாதுகாப்புச் சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏற்ப விதிமுறைகள் மற்றும் குறியீடுகளை உட்படுத்திய 10 துணை முறையாவணங்களை எம்சிஎம்சி அடையாளம் கண்டுள்ளது. இவ்வாண்டின் நான்காவது காலாண்டிற்கும் 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கும் இடையில் அந்த ஆவணங்களின் வளர்ச்சியை நிறைவு செய்ய நாங்கள் உத்தேசித்துள்ளோம்,'' என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற மலேசியா சாதனைப் புத்தகம் MBR-இன் 30-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி, மலாயா பல்கலைக்கழகத்தில் முஹமட் நஸ்ரி பிரேம் நாசிர் எழுதிய சிறார் பாலியல் கல்வி குறித்த நூலின் மூலம் மற்றொரு தேசிய அளவிலான சாதனையை MBR அங்கீகரிக்கும் என்று தியோ விளக்கினார்.
-- பெர்னாமா


