கோத்தா பாரு, ஜூலை 14- முந்திரி பருப்பு பாக்கெட்டுகளில் போதைப்பொருளை மறைத்து கடத்திய கும்பல் ஒன்றை முறியடித்த போலீசார், தம்பதியரைக் கைது செய்து அவர்களிடமிருந்து 31 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகைப் போதைப் பொருளைக் கைப்பற்றினர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் கோல கிராய் பாடாங் செம்பிலானில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட புரோட்டோன் எக்ஸ் 70 வாகனம் ஒன்றைச் சோதனையிட்ட போலீசார் 31 மற்றும் 49 வயதுடைய அத்தம்பதியரைக் கைது செய்ததாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது யூசுப் மாமாட் கூறினார்.
அந்த வாகனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 60.8 கிலோ எடையுள்ள கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் காய்ந்த தாவரங்கள் அடங்கிய 110 பிளாஸ்டிக் பொட்டலங்களும் 6.95 கிலோ எடையுள்ள கஞ்சா கட்டிகளும் 150 யாபா போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த மதிப்பு 23 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியாகும் என நேற்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக அதே தினம் பாசீர் பூத்தேவில் உள்ள அந்த தம்பதியரின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 775,000 வெள்ளி மதிப்புள்ள 22 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர் என்றார் அவர்.
இவ்விரு சோதனை நடவடிக்கைகளின் போதும் ரொக்கப் பணம் மற்றும் தங்கச் சங்கிலி ஆபரணங்களும் கைப்பற்றப்பட்டன என்று அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39 பி பிரிவின் கீழ் வரும் ஜூலை 17 வரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைத் தாங்கள் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


