ஷா ஆலம், ஜூலை 13- புத்ராஜெயாவில் இன்று காலை நடைபெற்ற 'பிக்னிக் & பாட்லக்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஏற்பட்ட சோர்வு காரணமாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தற்போது தேசிய இதய சிகிச்சைக் கழகத்தில் (ஐ.ஜே.என்.) சிகிச்சை பெற்று வருகிறார்.
காலை 10.00 மணியளவில் மகாதீர் ஐ.ஜே.என். அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் முழுமையாக ஓய்வெடுக்க மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவரது உதவியாளர் சூஃபி யூசோப் தெரிவித்தார்.
சோர்வு காரணமாக துன் டாக்டர் மகாதீர் தற்போது ஐ.ஜே.என்.னில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கிறார். அவர் ஓய்வெடுத்து வருகிறார். இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
அவர் இல்லம் திரும்பியவுடன் உடல் நிலையில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்து நான் உங்களுக்குத் தெரிவிப்பேன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, டாக்டர் மகாதீர் காலை 7.45 மணியளவில் தாமே சொந்தமாக காரில் நிகழ்ச்சிக்கு வந்தார். பின்னர் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஏரியைச் சுற்றி சுமார் 9 கி.மீ தூரம் ஒருங்கிணைந்த சைக்கிள் ஓட்டுதல் நடவடிக்கையில் பங்கேற்றார்.
இருப்பினும், சைக்கிள் ஓட்டுதலை முடித்த பிறகு அவர் சோர்வாக காணப்பட்டார்.
நிகழ்விடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்ததாகவும் கூறப்படுகிறது.


