பாசிர் மாஸ், ஜூலை 13 - கோத்தா பாருவில் உள்ள ஒரு தனியார் உயர்கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 427 மாணவர்கள் நச்சுணவினால் பாதிக்கப்பட்டனர். இந்த நச்சுணவு சம்பவத்திற்குப் பொறுப்பான கேட்டரிங் சேவை நிறுவனம் சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யாமல் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கைகளை ஜூலை 9 முதல் ஏழு நாட்களுக்கு
மூட 1988 ஆம் ஆண்டு தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் 18(1)வது பிரிவின் கீழ் அதன் நடத்துநருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டதாக கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹுசின் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கேட்டரிங் சேவைகளை வழங்கும் இடங்கள் உட்பட அனைத்து உணவு வளாகங்களும் சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் கேட்டரிங் நடத்துநர் சுகாதார அமைச்சில் பதிவு செய்யவில்லை என்பதையும் அவர் ஒரு தனியார் இல்லத்தில் இருந்து செயல்பட்டு வருவதையும் நாங்கள் கண்டறிந்தோம். அதனைத் தொடர்ந்து அந்த வளாகத்தை ஏழு நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, நச்சுத்தன்மை பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது. புதிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பாதிப்புக்கு கோழி உணவே காரணம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இருப்பினும், ஆய்வக உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறோம் என்று அவர் அவர் குறிப்பிட்டார்.
இன்று பாசிர் மாஸ் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் 2025 ஒருங்கிணைந்த பொது சுகாதார சட்ட அமலாக்க நடவடிக்கையின் 7வது தொடரை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
அந்த கல்லூரியில் நச்சுணவினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வியாழக்கிழமை 427 பேராக உயர்ந்தது.


