சுங்கை பட்டாணி, ஜூலை 13- இங்கு அருகிலுள்ள புக்கிட் செலம்பாவ், தாமான் செம்பக்கா இண்டாவில் புதிதாகப் பிறந்ததாக நம்பப்படும் ஆண் குழந்தை ஆடை மற்றும் தரை விரிப்பு ஏதுமின்றி சாலையோரம் கற்கள் நிறைந்த தரைப்பகுதியில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை 9.55 மணிக்கு தமது துறைக்கு அழைப்பு வந்ததாக கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
துணிகளை காயப் போட்டுக் கொண்டிருந்த குடியிருப்பாளர் ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு சுற்றுப்புறப் பகுதியில் தேடத் தொடங்கியதாக அவர் சொன்னார்.
சாலையோரத்தில் ஒரு ஆண் குழந்தை கிடப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த அண்டை வீட்டார் குழந்தையை பாதுகாப்பான பகுதிக்கு எடுத்துச் சென்று காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) எதுவும் பொருத்தப்படவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
பரிசோதனைக்காக அக்குழந்தை சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஹன்யான் கூறினார்.
பரிசோதனையில் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் வலது கண்ணிலும் உடலின் வலது பக்கத்திலும் கீறல் காயங்கள் மட்டுமே இருந்தன என்று அவர் கூறினார்.
இதன் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 17 வயது இளைஞரை போலீசார் தற்போது தேடி வருவதாகவும் 19 வயது பெண் இளம்பெண் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


