கோலாலம்பூர், ஜூலை 13- உயர்கல்விக் கூடங்களில் மாணவர்களிடையே இஸ்லாமிய அரசின் (ஐ.எஸ்.) தீவிரவாத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாத இயக்கங்கள் தொடர்பான நடவடிக்கைகளை உயர்கல்வி அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
தீவிரவாத சித்தாந்தத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 36 வங்காளதேசிகளில் சிலர் சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் சமீபத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.
இது போன்ற தீவிரவாத சித்தாந்தங்கள் நாட்டிற்குள்ளிருந்து அல்லது வெளியிலிருந்து பரவாமலிருப்பதை உறுதிசெய்ய பாதுகாப்புப் படையினருடன் குறிப்பாக அரச மலேசிய காவல்துறையுடன் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
உள்துறை அமைச்சுக்கும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்போதும் நல்ல நிலையில் இருந்து வருகிறது என்று இன்று இங்கு நடைபெற்ற செத்தியா வங்சா அம்னோ பிரிவு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் தலைவர் டான் ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் ஜூன் 30ஆம் தேதி கூறியிருந்தார்.
வங்காளதேசத்தினர் சம்பந்தப்பட்ட தீவிரவாத வலையமைப்பில் எந்த மலேசியர்களும் சேர்க்கப் படவில்லை என்பதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார்.
காவல் துறையின் சிறப்புப் பிரிவின் விசாரணையில் ஐ.எஸ். சித்தாந்தத்தின் அடிப்படையில் தீவிரவாத நம்பிக்கைகளை மலேசியாவிற்கு பரப்பிய கும்பலில் வங்கதேசத்தினர் மட்டுமே ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.


