கோலாலம்பூர், ஜூலை 13- உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலின் பெயரைப் பயன்படுத்தி டிக்டோக் கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பில் காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ளது. அந்த கணக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நுட்பங்களைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்டது என நம்பப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிதி உதவி வழங்கும் அந்த டிக்டோக் கணக்கு தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 504வது பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இடைக்கால இயக்குநர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
இது குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்கும் அதே வேளையில் சமூக ஊடகங்கள் வழியாக நிதி உதவி வழங்கப்படுவது தொடர்பான தகவல்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு தகவலின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும்படியும் பொதுமக்களுக்கு அவர் நினைவூட்டினார்.
சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, டிக்டோக்கில் சைபுடின் நசுத்தியோனின் பெயர் மற்றும் படத்தை மோசடி நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்தும் போலி கணக்குகள் இருப்பது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உள்துறை அமைச்சர் அலுவலகம் ஒரு அறிக்கையில் கேட்டுக் கொண்டது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் டிக்டோக்கிடம் புகார் அளித்துள்ளதாக அமைச்சரின் அலுவலகம் கூறியது.
இது வரை Saifuddin_Nasution0, Saifuddin_Nasution1 மற்றும் Saifuddin_Nasution12 ஆகிய மூன்று போலி டிக்கோக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.


