(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 13- கடந்த வெள்ளிக்கிழமை விடியற்காலை பெய்த கனமழை காரணமாக புக்கிட் கெமுனிங் வட்டாரத்தின் பல பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நீடித்து வரும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் அனைத்து அரசு நிறுவன பிரதிநிதிகளுடன் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் இவ்வாரம் சந்திப்பு நடத்தவிருக்கிறார்.
அதே சமயம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகளை தொகுதி விரைந்து மேற்கொண்டு வருகிறது.
சமீபத்திய வெள்ளம் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறையினரின் அறிக்கைக்காக தொகுதி சேவை மையம் காத்திருப்பதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் யோகேஸ்வரி சாமிநாதன் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கன மழை காரணமாக புக்கிட் கெமுனிங், ஜாலான் பத்து பாத்தா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், இதனால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் பாதிக்கப்பட்டன என்றார்.
இந்த வெள்ளத்தால் லோட் நிலக் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாம் மிகவும் வருந்துகிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நான் மேற்கொண்ட ஆய்வில் பல வீடுகள் முறையான கால்வாய் வசதியைக் கொண்டிராதது தெரிய வந்தது. இதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்ப சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட ஜாலான் பத்து பாத்தா பகுதியில் உள்ள வடிகால்களைத் துப்புரவு செய்யும் பணியை கும்புலான் டாருள் ஏஹ்சான் பெர்ஹாட் (கே.டி.இ.பி.) மற்றும் இன்ஃப்ராசெல் ஆகிய நிறுவனங்கள் விரைவில் மேற்கொள்ளும்.
அதே சமயம், புக்கிட் கெமுனிங் சாலையில் சீரமைப்பு பணிகளை ரோட்கேர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வெள்ள அபாயம் உள்ள லோட் நிலப்பகுதிகளில் கனரக இயந்திரங்களின் உதவியுடன் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

