ஜோர்ஜ் டவுன், ஜூலை 13- இல்லாத இணைய முதலீட்டு மோசடி கும்பலின் ஆசை வார்த்தைக்குப் பலியான சிங்கப்பூரின் முன்னாள் கிடங்கு உதவி மேற்பார்வையாளர் 500,000 வெள்ளியை இழந்தார்.
இங்கு அருகிலுள்ள சுங்கை பாக்காப்பைச் சேர்ந்த ஐம்பத்து மூன்று வயதான அந்த நபர் கடந்த மார்ச் 21ஆம் தேதி பங்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் விளம்பரத்தை முகநூலில் கண்டதாக பினாங்கு துணை காவல்துறைத் தலைவர் டத்தோ முகமது அல்வி ஜைனல் அபிடின் கூறினார்.
பின்னர் அவர் தன்னை "லியான்" என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். குறுகிய காலத்தில் அதிக வருமானத்தை வழங்கும் செயலி வாயிலான முதலீட்டுத் திட்டத்தை பாதிக்கப்பட்ட நபருக்கு அந்த பெண்மணி அறிமுகப்படுத்தினார்.
அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியால் ஈர்க்கப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், அந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து முதலீடு செய்யத் தொடங்கினார்.
கடந்த மார்ச் 22 முதல் ஜூன் 24 வரை சந்தேக நபர் வழங்கிய ஆறு தனித்தனி வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 500,000 மதிப்புள்ள 22 பரிவர்த்தனைகளை அந்த நபர் செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், பணம் செலுத்தப்பட்ட பிறகும் பாதிக்கப்பட்ட நபரால் அந்த செயலியை அணுக முடியவில்லை என்று முகமது அல்வி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு அக்கும்பலின் வலையமைப்பைக் கண்டுபிடிப்பது உட்பட விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

