சுபாங் ஜெயா, ஜூலை 13- சிலாங்கூருக்கு வருகை புரியும் ஜப்பானிய சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை கடந்தாண்டு 132,526 பேராக உயர்வு கண்டது. இதன் வழி மாநிலத்திற்கு வரும் அந்நிய சுற்றுப்பயணிகளின் ஜப்பானியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு 110,018ஆக இருந்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 20.5 விழுக்காடு அதிகமாகும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
சிலாங்கூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான இரு வழி உறவுகள் காரணமாக அந்நாட்டிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை வரும் ஆண்டுகளிலும் உயர்வு காணும் என அவர் சொன்னார்.
இங்குள்ள சன்வே சிட்டியில் நேற்ற நடைபெற்ற 49வது போன் ஓடோரி 2025 நிகழ்வின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் இந்நிகழ்வில் மலேசியாவுக்கான ஜப்பானிய அரச தந்திரி ஷிகத்தா நோரியுக்கியும் கலந்து கொண்டார்.
ஜப்பான் உள்பட அனைத்துலக சுற்றுலா கண்காட்சிகளில் பங்கேற்றதன் வாயிலாக மாநிலத்தின் கவர்ச்சிகரமான சுற்றுலா இடங்களை சிலாங்கூர் பிரபலப்படுத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.
தீவிர பிரசார மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் வாயிலாக எண்பது லட்சம் சுற்றுப்பயணிகளையும் அதன் மூலம் 1,140 கோடி வெள்ளி வருமானத்தையும் ஈட்டும் இலக்கை சிலாங்கூர் அடையும் முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஜப்பான் நாட்டின் கோடை கால விழாவான இந்த போன் ஓடோரி நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.


