புத்ராஜெயா, ஜூலை 11- மலேசியாவின் மக்கள் தொகை வரும் 2059 ஆம் ஆண்டில் 4 கோடியே 23 லட்சத்து 80 ஆயிரம் பேராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2060ஆம் ஆண்டு 4 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரமாகக் குறைந்து பின்னர் 2065 இல் 4 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரமாகவும் 2070 இல் 4 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரமாகவும் வீழ்ச்சி காணும் என்று மலேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்தது.
கபந்த 2020 முதல் 2059 வரை மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அதன் வளர்ச்சி விகிதம் 2020 இல் 1.7 சதவீதத்திலிருந்து 2060 இல் 0.1 சதவீதமாகக் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தலைமை புள்ளிவிவர நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் கூறினார்.
2060 வரையிலான 40 ஆண்டு காலக் கட்டத்தில் கிளந்தான், பகாங், பேராக், திரெங்கானு மற்றும் புத்ராஜெயாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2060 ஆம் ஆண்டில் 81 லட்சம் மக்கள் தொகையுடன் சிலாங்கூர் அதிக மக்கள் வசிக்கும் மாநிலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜோகூர் (49.9 லட்சம் ) மற்றும் சபா (48.9 லட்சம்) ஆகியவை உள்ளன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்ட "மலேசியா- 2020-2060 மக்கள்தொகை கணிப்பு" என்ற அறிக்கையை புள்ளிவிபரத்துறை வெளியிட்டது.
இது 2020 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகப் பயன்படுத்தி 40 ஆண்டுகளுக்கான மலேசியாவின் மக்கள்தொகை அமைப்பு தொடர்பான புள்ளிவிவரங்களைக் காட்டுகிறது.
மக்கள் தொகையில் பூமிபுத்ரா மிக உயர்ந்த சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2020இல் 69.4 சதவீதத்திலிருந்து 2060 இல் 79.4 சதவீதமாக ஆகும். 2060 இல் சீனர்களும் இந்தியர்களும் முறையே 14.8 சதவீதமாகவும் (2020: 23.2 சதவீதம்) 4.7 சதவீதமாகவும் (2020: 6.7 சதவீதம்) குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


