புத்ரஜெயா, ஜூலை 11 - ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைப்பதற்காகக் கல்வி அமைச்சு ஏழு செயல்திட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தவுள்ளது என்று அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார்.
அதில் முக்கியமற்ற பள்ளி நிகழ்வுகளை ரத்து செய்தல், தேர்வு கண்காணிப்பாளர்களாக பொதுமக்களை நியமித்தல், தினசரி பாடத்திட்ட (RPH) பதிவுகளை எளிமைப்படுத்துதல் போன்ற கூறுகளும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மலேசிய கல்வித் தரநிலை (SKPM) மதிப்பீடுகளை குறைத்தல், மாணவர் வருகை பதிவை சுலபமாக்குதல், கல்வி கற்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு கூடுதல் அதிகாரம் போன்ற அம்சங்கள் ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.
அனைத்து மாநில கல்வித் துறைகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இந்த முயற்சிகளை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து முயற்சிகளும் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்யும் பணியை கல்வி இயக்குநர்களிடம் ஒப்படைத்துள்ளதாக ஃபட்லினா விளக்கினார்.
இதுகுறித்த அறிக்கை 3 மாதங்களுக்கு ஒரு முறை தன்னிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து நிலை கல்வி இலாகா மற்றும் துறைகளும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


