ஷா ஆலம், ஜூலை 11- சுங்கை பூலோ, தாமான் ஸ்ரீ பிரிஸ்தானாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு மாடி ஹோட்டல் நேற்று அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு எதிராக கடந்த 2018 முதல் பல முறை குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கடந்த ஏப்ரல் மாதம் கடைசியாக வழங்கப்பட்ட குற்றப்பதிவும் அடங்கும் என்று கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.கே.எஸ்.) அமலாக்கத் துறை இயக்குநர் முகமது லுட்பி மிஸ்லாஹுடின்
கூறினார்.
கோல சிலாங்கூர் நகராண்மைக்கழக நிர்வாகப் பகுதியில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் வணிக நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 21 உறுப்பினர்கள் பங்கு கொண்டதாக அவர் கூறினார்.
இதற்கு முன்னர் பல முறை இந்த ஹோட்டலின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் நகராண்மைக் கழகத்தில் வணிக உரிமத்திற்கு விண்ணப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
இருப்பினும், வளாக உரிமையாளர் இந்த வாய்ப்புகளை புறக்கணித்துவிட்டு சட்டவிரோதமாக தங்கள் தொழிலைத் தொடர்ந்ததைத் தொடர்ந்து நேற்று அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அனைத்து வர்த்தக வளாக நடத்துநர்களும் தொழில் தொடங்குவதற்கு முன்பு விதிமுறைகளுக்கு இணங்கி செயல்பட வேண்டும் என்பதோடு சட்டப்பூர்வ ஒப்புதலையும் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


