புத்ராஜெயா, ஜூலை 11- இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல்
நிலைத்தன்மை அமைச்சரின் பொறுப்புகளை தோட்டத் துறை மற்றும்
மூலப்பொருள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி ஏற்கிறார்.
இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்த நியமனத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல்
தெரிவித்துள்ளதோடு கடந்த ஜூலை 9ஆம் நடைபெற்ற அமைச்சரவைக்
கூட்டத்திலும் இது குறித்து தெரிவிக்கப்பட்டதாக அரசாங்கத் தலைமைச்
செயலாளரும் அமைச்சரவை செயலாளருமான டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி
தெரிவித்தார்.
ஜூலை மாதம் 4ஆம் தேதி தொடங்கி இயற்கை வளம் மற்றும்
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியை தாம் துறப்பதாக நிக்
நஸ்மி அகமது கடந்த மே மாதம் 28ஆம் தேதி கூறியிருந்தார்.
43 வயதான நிக் நஸ்மி இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை
மாற்ற அமைச்சர் பொறுப்பை கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
ஏற்றார். அமைச்சில் தேவைப்படக்கூடிய சீர்திருத்தங்களை செய்வதில் நிக்
நஸ்மி தீவிரம் காட்டினார்.
1974ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தை (சட்டம் 127) திருத்தியது
மற்றும் சுற்றுச்சூழல் விளைவு மீதான மதிப்பீட்டு அறிக்கையின்
வெளிப்படைத் தன்மையை அதிகரித்தது ஆகியவை அமைச்சில் அவர்
செய்த சீர்திருத்தங்களாகும்.
அண்மையில் நடைபெற்ற கெஅடிலான் கட்சித் தேர்தலில் உதவித்
தலைவர் பதவியைத் தற்காக்கத் தவறியதைத் தொடர்ந்து அமைச்சர்
பதவியை துறக்க நிக் நஸ்மி முடிவெடுத்தார்.


