ஷா ஆலம், ஜூலை 11: அடுத்த ஆண்டுக்குள் ஸ்மார்ட் சேவா திட்டத்தில் மொத்தம் 3,000 வீடுகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இது குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிகபட்ச ஐந்து ஆண்டுகள் வாடகைக் காலத்துடன் வீடுகளை சொந்தமாக்க உதவும்.
இதுவரை மொத்தம் 2,221 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மேலும் தகுதியானவர்கள் மட்டுமே இந்த சலுகைகளைப் பெறுவதை உறுதிசெய்ய மாநில நிர்வாகம் தற்போதுள்ள அமைப்பை மேம்படுத்தும் என வீட்டுவசதி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமன் ஷா கூறினார்.
"தற்போது, 2,221 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கிள்ளான் மாவட்டத்தில் உள்ளன (407 வீடுகள்). அடுத்த ஆண்டுக்குள், 3,000 வீடுகள் வாடகைக்கு விடப்படும்.
"ஸ்மார்ட் சேவா திட்டம் என்பது ரூமா சிலாங்கூர் கூ (RSKU) திட்டமாகும். இது மாநில அரசாங்கத்தால் கட்டப்படவில்லை. ஆனால் ரூமா சிலாங்கோர் கூ வீடுகள் டெவலப்பர்களிடமிருந்து வாங்கப்படுகின்றன.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் ஸ்மார்ட் சேவா திட்டம் தொடர்பான தீர்மானத்தின் இறுதி அமர்வின் போது போர்ஹான் அமன் ஷா இவ்வாறு கூறினார்.
ஸ்மார்ட் சேவா திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வாடகைக் காலத்தில் வீடுகளை சொந்தமாக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
அவர்கள் அந்த வீட்டிற்கு செலுத்திய மொத்த வாடகையில் 30 சதவீதம் திரும்ப தரப்படும்.இதை ரூமா சிலாங்கூர் கூ வீட்டை வாங்க வைப்புத்தொகையாகப் பயன்படுத்தலாம்
2025ஆம் ஆண்டுக்குள், ரூமா சிலாங்கூர் கூ 3.0 திட்டம் மூலம் 60,000 வீடுகளை கட்ட சிலாங்கூர் அரசு இலக்கு வைத்துள்ளது.


