பிந்தாங்கூர், ஜூலை 11- இங்குள்ள தஞ்சோங் மானிஸ் அருகே நேற்று சேவல் சண்டை நடத்தப்பட்ட இடத்தில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
சண்டையின் போது பயன்படுத்தப்பட்ட உயிருள்ள மற்றும் இறந்த சண்டை சேவல்கள், நிறுவை கருவி மற்றும் வெண் பலகை உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக மெராடோங் காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி டான்ஸ்லி மெரிங் தெரிவித்தார்.
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அனைத்து உள்ளூர் சந்தேக நபர்களும் மேல் நடவடிக்கைக்காகப் பிந்தாங்கூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இந்த வழக்கு 1999 ஆம் ஆண்டு கால்நடை பொது சுகாதார கட்டளைச் சட்டத்தின் 73(1)(ஜி) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 வெள்ளி வரை அபராதம், கூடுதல் பட்சம் ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சேவல் சண்டை உட்பட எந்தவொரு சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளிலிருந்தும் பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும் என்பதோடு அத்தகைய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளும்படி அவர் அறிவுறுத்தினார்.


