கூச்சிங், ஜூலை 10: தனியார் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற 60 வயதுடைய நபர் ஒருவர், இணைய வழி போலி பங்கு முதலீட்டு மோசடியில் சிக்கி RM200,000 இழந்தார்.
கடந்த மே மாதம், பாதிக்கப்பட்டவர் சமூக ஊடக தளமான முகநூலைப் பார்வையிட்டதாகவும், அதில் இடம்பெற்ற பங்கு முதலீட்டு விளம்பரத்தால் ஈர்க்கப் பட்டதாகவும் மிரி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.
"பின்னர் பாதிக்கப்பட்டவர் முகநூல் பக்கத்தில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து, 'எ கேதரிங் ஆஃப் டேலண்ட்ஸ் எஃப்' எனப்படும் வாட்ஸ்அப் பயன்பாட்டுக் குழுவில் சேர்க்கப்பட்டார்.
"பின்னர், பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரால் வழங்கப்பட்ட இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் கட்டம் கட்டமாக ஐந்து பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
முதலீட்டு இலாபத்தைத் திரும்பப் பெற விரும்பினால் கூடுதல் பணம் செலுத்துமாறு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம் தொடர்ந்து கேட்டுள்ளார். அதன் பின், தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணர்ந்ததாக முகமது ஃபர்ஹான் கூறினார்.
குறைந்தபட்சம் ஒரு வருடம் அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரம்படி மற்றும் அபராதமும் விதிக்கப்படும் தண்டனைச் சட்டப்பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.
— பெர்னாமா

