ஷா ஆலம், ஜூலை 11- இரசாயனம் நிரப்பப்பட்ட பீப்பாய்களை ஏற்றிய
லோரி மற்றொரு லோரியுடன் மோதியதில் நைட்ரக் அமிலம் சாலையில்
கசிந்து வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது.
ஜாலான் பெசார் சபாக் பெர்ணம்- சுங்கை பெசார் சாலையில் நிகழ்ந்த
இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 7.01 மணிக்கு தங்களுக்கு தகவல்
கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார்
கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இரசாயனம் ஏற்றிய
லோரி மற்றொரு லோரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதைக்
கண்டனர். இதனால் இரசாயனம் நிரப்பப்பட்ட பீப்பாய்கள் கீழே விழுந்து
சாலையில் கசிந்தன.
இந்த விபத்தில் லோரி ஒன்றின் ஓட்டுநர் லேசான
காயங்களுக்குள்ளானதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
சாலையில் கசிந்த அமிலத்தை ஹெஸ்மாட் எனப்படும் அபாயகர
இரசாயனம் அகற்றும் பிரிவினர் அகற்றி சாலையை சுத்தம் செய்தனர்.
இந்நடவடிக்கை விடிற்காலை 2.42 மணிக்கு முடிவுக்கு வந்தது என்று அவர்
தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் சபாக் பெர்ணம் மற்றும் சுங்கை பெசார் தீயணைப்பு
நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர்களோடு ரவாங் தீயணைப்பு
நிலையத்தைச் சேர்ந்த ஹெஸ்மாட் பிரிவினரும் பங்கு கொண்டனர் என
அவர் குறிப்பிட்டார்.


