நேய்பியாடாவ், ஜூலை 11 - அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கடந்த
திங்கள்கிழமை 14 நாடுகளுக்கு புதிய சுற்று வரியை அறிவித்தார். அதில்
மிக அதிகமாக 40 விழுக்காடு வரி மியன்மார் நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது நாட்டின் ஏற்றுமதி பொருள்களுக்கு விதிக்கப்படும்
நாற்பது விழுக்காட்டு வரியைக் குறைக்கும்படி மியன்மார் ஆளும்
இராணுவ ஜெனரல் அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிபர் டிரம்பிற்கு அனுப்பிய கடிதத்தில் வரி விகிதத்தைச் சுட்டிக்காட்டிய
மன் அவுங் ஹியாங், அந்த வரி விகிதத்தை 10 முதல் 20 விழுக்காடாகக்
குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதற்கு கைமாறாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்
பொருள்களுக்கு விதிக்கப்படும் லெவியை சுழியம் முதல் பத்து
விழுக்காட்டிற்கு குறைக்கவும் தாங்கள் முன்வருவதாக அவர்
குறிப்பிட்டுள்ளார்.
அவசியம் ஏற்பட்டால் இவ்விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தனது
குழுவை வாஷிங்டனுக்கு அனுப்ப தாம் தயாராக இருப்பதாகவும் அவர்
கூறியதாக அரசாங்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, வாஷிங்டனில் பேசிய அதிபர் டிரம்ப், கனடாவிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 35 விழுக்காடு வரி
விதிக்கப்படும் என கூறினார்.
இந்த புதிய வரி எதிர்வரும் ஆகஸ்டு முதலாம் தேதி அமலுக்கு வரும் என்றும்
கனடா பதில் நடவடிக்கை எடுத்தால் வரி மேலும் அதிகரிக்கும் என்றும்
அந்நாட்டு பிரதமர் மார்க் கெர்னிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர்
குறிப்பிட்டுள்ளார்.


