கோலாலம்பூர், ஜூலை 11- கடந்த மாதம் 7 ஆம் தேதி மலேசியாவுக்கு வந்ததாகக் கூறப்படும் பிரிட்டனைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் காணாமல் போனது தொடர்பில் அரச மலேசியா போலீஸ் படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பதினேழு வயதான டேவிட் ரென்ஸ் கேலட்ஸ் பாலிசோங் என்ற அந்த இளைஞர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வழியாக மலேசியாவிற்குள் நுழைந்ததோடு அவர் இன்னும் நாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ ஃபாடில் மார்சஸ் கூறினார்.
இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பதற்கான முயற்சிகளுக்கு உதவக்கூடிய அனைத்து தகவல்களையும் அடையாளம் காண கூடுதல் விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு காணாமல் போன நபர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தகவல் வழங்குவதை எளிதாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட இளைஞரின் படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஊகங்களை அல்லது கருத்துகளை வெளியிட வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளபட்டுள்ளனர்.


