ஷா ஆலம், ஜூலை 11 - தேசிய நீர் சேவை ஆணையத்தால் (ஸ்பான்) தற்போது பரிசீலிக்கப்பட்டு வரும் குடிநீர் கட்டண உயர்வு கட்டண உயர்வுக்கான புதிய விண்ணப்பம் அல்ல. மாறாக, கடந்தாண்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் ஒரு பகுதியே என்று உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம்
ஹஷிம் கூறினார்.
பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் சென். பெர்ஹாட் நிறுவனம் தொடர்ந்து ஆக்கக்கரமான முறையில் செயல்படுவதற்கும் மாநிலத்திலுள்ள மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கும் இந்த கட்டண உயர்வு விண்ணப்பம் அவசியமானது என அவர் சொன்னார்.
இந்த விண்ணப்பம் புதியது அல்ல. இது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட முதல் கட்டத்தின் தொடர்ச்சி. பரிந்துரைக்கப்பட்ட கட்டணம் நியாயமானது என்பதோடு அது நீர் சேவை ஆணையத்தின் இறுதிக் கட்ட பரிசீலனையில் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
நீர் கட்டணத்தில் ஏற்படும் எந்த அதிகரிப்பும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு குறிப்பாக மாதம் 20 கன மீட்டருக்கும் குறைவாக நீரைப் பயன்படுத்தும் டாருள் ஏஹ்சான் நீர் திட்டப் பங்கேற்பாளர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர் சொன்னார்.
பயனீட்டாளர்கள் நீரை விவேகமுடன் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் இந்த நீர் கட்டண மறுஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே சமயம், நீர் கட்டண அமலாக்கம் நியாயமானதாகவும் அனைத்து தரப்பினரின் நலனை கருத்தில் கொள்ளும் வகையிலும்
உள்ளதை மாநில அரசு உறுதி செய்யும் என அவர் தெரிவித்தார்.
தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட பத்து மாநிலங்களின் நீர் சேவை நடத்துநர்களிடமிருந்து நீர் கட்டண மறுஆய்வு தொடர்பானா விண்ணப்பத்தை தாங்கள் பெற்றதை ஸ்பான் நேற்று
உறுதிப்படுத்தியிருந்தது.


