ஷா ஆலம், ஜூலை 11- குறைவான பொது போக்குவரத்து பயன்பாடு,
புறநகர்ப் பகுதிகளுக்கான வரையறுக்கப்பட்ட பயணச் சேவை, தொடக்க
மற்றும் இறுதி பயண இணைப்பில் காணப்படும் பலவீனம் ஆகிய
பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு சிலாங்கூர் மாநிலத்தில், பொது
போக்குவரத்து சூழல் மீது விரிவான அளவில் ஆய்வு செய்யப்பட
வேண்டும் என்று நீர் மேலாண்மை, விவசாயம், உள்கட்டமைப்பு,
போக்குவரத்துக்கான சிறப்புத் தேர்வுக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மாநிலத்தில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை
மிகவும் குறைவாக அதாவது ஆண்டுக்கு 1 கோடியே 6 லட்சம் பேராகவும்
தினசரி 29,000 பேராகவும் மட்டுமே உள்ளதாக அந்த சிறப்புக் குழுவின்
தலைவரும் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான மிஷல் இங் ஸீ
கூறினார்.
ஸ்மார்ட் சிலாங்கூர் இலவச பஸ் சேவை மற்றும் டி.ஆர்.டி. எனப்படும்
கோரிக்கை அடிப்படையிலான டிரான்சிட் போக்குவரத்து சேவையும் இதில்
அடங்கும் எனக் கூறிய அவர், சிலாங்கூரின் மக்கள் தொகை 74 லட்சம்
பேராக இருந்த போதிலும் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது
என்றார்.
பொது மக்கள் போக்குவரத்துக்கு சொந்த வாகனங்களைச் சார்ந்திருப்பது
அதிகமாக உள்ளதை தரவுகள் காட்டுவதாகக் கூறிய அவர், அவர்கள்
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கு ஆக்ககரமான
வியூகங்கள் வகுக்கப்படுவது அவசியம் என்றார்.
பொது போக்குவரத்து தொடர்பான பெருந்திட்டத்தை சிலாங்கூர் இதுவரை
கொண்டிருக்கவில்லை என்று மாநில சட்டமன்றத்தில் சிறப்பு
செயல்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்த போது மிஷல் குறிப்பிட்டார்.
கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிலாங்கூர் போக்குவரத்து
முன்னெடுப்பின் வழி பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை 500,000 பேராக உயர்வு கண்டதாகவும் எனினும், இது
விரிவான பயனீட்டு இலக்கை அடையவில்லை என்றும் அவர் சொன்னார்.


