கோலாலம்பூர், ஜூலை 11- வர்த்தகம், பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் இரு தரப்பு நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டை மலேசியாவும் அமெரிக்காவும் மறுவுறுதிப்படுத்தியுள்ளன.
நேற்று இங்கு நடைபெற்ற 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்களின் இடைவேளையில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசானும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவும் சந்தித்து இரு தரப்பு பேச்சுக்களை நடத்தியதாக வெளியறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) கூறியது.
இரு நாட்டு மக்களுக்கும் நீடித்த பலன்களைத் தரக்கூடிய புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் உள்ள குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை தரப்பும் அங்கீகரித்தாக அது குறிப்பட்டது.
பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, பகிரப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டு பல ஆண்டுகளாக நீடித்து வரும் மலேசிய- அமெரிக்க உறவை இரு தரப்பும் பிரதிபலித்தன.
பொதுவான நலன்கள் சம்பந்தப்பட் வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டதோடு வரும் ஆண்டுகளில் அணுக்கமான மற்றும் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கவும் விருப்பம் தெரிவித்தன என்று விஸ்மா புத்ரா அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
முன்னதாக வியூக சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கை இரு தலைவர்களும் பார்வையிட்டனர்.
எரிசக்தி துறையில் தனது ஆற்றலை வலுப்படுத்துவதும் மலேசியாவின் முயற்சிக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது.


