செப்பாங், ஜூலை 10 - கடந்த மாதம் சைபர்ஜெயாவில் நிகழ்ந்த மாணவி கொலை வழக்கில் கைதான வேலையில்லாத இளைஞனும் அவனது காதலியும் இன்று சிப்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
ஜூன் 23ஆம் தேதி இரவு 9.11 - 11.31 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சைபர்ஜெயா, வில்லா அடுக்குமாடி குடியிருப்பில் அக்கொலையைப் புரிந்ததாக, 19 வயது ஸ்ரீ டர்வின் மீது குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த முதன்மைக் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக, அவனது காதலியான 19 வயது தினேஸ்வரி 302-ஆவது சட்டத்துடன் இணைந்து 109-ஆவது சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற அதிகார வரம்பில் இருப்பதால், இருவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை. கொலைக் குற்றம் என்பதால் இருவருக்கும் ஜாமீனும் வழங்கப்படவில்லை.
இந்த வழக்கை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதை விரைந்து மேற்கொள்ளுமாறு ஸ்ரீ டர்வின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகரன் கேட்டுக் கொண்டார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் மறுசெவிமெடுப்பை செப்டம்பர் 11-ஆம் தேதி நிர்ணயித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


