ஜோகூர் பாரு, ஜூலை 10 - இன்று காலை நடத்தப்பட்ட பலதரப்பு அணுசக்தி பாதுகாப்பு கண்டறிதல் பயிற்சியின் போது நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஐந்து காவல்துறை அதிகாரிகளில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதோடு அவர்களுக்கு சுவாச உதவி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர மூன்று போலீஸ்காரர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தற்போது ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானாஅமினா மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தேசியப் போலீஸ் படைத் தலைவர் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த உடனே மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் அந்த ஐந்து பேரும் உடனடி சிகிச்சை பெற்றதாக அவர் கூறினார்.
சுல்தானா அமீனா பருத்துவமனையில் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் குணமடைந்து வழக்கம் போல் சேவை செய்ய நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று அவர் மருத்துவமனையில் பெர்னாமா சந்தித்தபோது கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் அரச மலேசிய போலீஸ் விமானப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற இருவர் தஞ்சோங் குப்பாங் காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர்கள் என்றும் முகமது காலிட் குறிப்பிட்டார்.
ஜோகூர் பாருவிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுங்கை பூலாயில் பலதரப்பு அணுசக்தி பாதுகாப்பு கண்டறிதல் பயிற்சியை இன்று காலை மேற்கொண்டிருந்த போது இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பயற்சி நடைபெற்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 9எம்-பிஎச்ஜி பதிவு எண் கொண்ட ஹெலிகாப்படர் ஒன்று விபத்தில் சிக்கியதை மலேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎம்) அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியது.
அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர் ஐந்து பயணிகளுடன் தஞ்சோங் குப்பாங் போலீஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 9.51 மணியளவில் புறப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
பயிற்சியின் போது பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் பழையவை எனக் கூறப்படுவது குறித்து கருத்து தெரிவித்த முகமது காலிட், பராமரிப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தால் அதன் பயன்பாட்டு காலம் ஒரு முக்கிய காரணமாக இருக்காது என்றார்.
நீண்ட காலப் பயன்பாடு ஒரு பிரச்சனையாக இல்லை. பராமரிப்பு முறையாகச் செய்யப்படுவதே முக்கியம். நடந்த இச்சம்பவம் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்று அவர் கூறினார்.


