ஸ்திராஸ்பூர்க் (பிரான்ஸ்), ஜூலை 10 - 2014-ஆம் ஆண்டு ஜூலையில் உக்ரேய்னில் மலேசியா ஏர்லைன்ஸின் MH17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்திற்கு ரஷ்யாவே பொறுப்பு என பிரான்ஸில் ECHR எனப்படும் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் செல்லும் வழியில் கிழக்கு உக்ரேய்னில் அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்திலிருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.
அச்சம்பவம் குறித்து போதுமான விசாரணையை நடத்த ரஷ்யா தவறியுள்ளதோடு, கேட்கப்பட்ட தரவுகளைக் கொடுக்கவும் மறுத்துள்ளது.
அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான சட்டப்பூர்வ வழிகளையும் அது வழங்கவில்லை.
மாறாக, விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்பதையே திரும்ப திரும்பச் சொல்லி, உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு துன்பத்தை கூட்டியுள்ளது என நீதிமன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுச் செய்தது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு MH17 விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், உக்ரேய்னில் மனித உரிமை மீறல்களுக்கும் நீதி கோருவதற்கான தொடர் முயற்சியில் முக்கியமானதாக் கருதப்படுகிறது.


