ஈப்போ, ஜூலை 10 - இங்குள்ள ஜாலான் கிளாங் 2, ஜெலாப்பாங்
தொழில்பேட்டையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழிற்சாலையில்
நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து தொடர்பில் நேற்றிவு 11.51 மணியளவில் புகார்
கிடைத்ததைத் தொடர்ந்து ஈப்போ, மேரு ராயா மற்றும் பாசீர் பூத்தே
தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளும் 37
உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பேராக் மாநில
தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி
இயக்குநர் சபோராட்ஸி நோர் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை
சேமித்து வைக்கும் கிடங்கு, தயாரிப்பு பொருள்கள் மற்றும் பொட்டலமிடும்
பகுதியில் 75 விழுக்காடு தீ சூழ்ந்ததை அவர்கள் கண்டனர்.
தீப்பற்றி எரியும் தொழிற்சாலையில் 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட
இரு டீசல் டாங்கிகளும் 800 லிட்டர் அளவிலான அமோனியாவும்
இருந்ததாக தொழிற்சாலையின் உரிமையாளர் தங்களிடம் தெரிவித்ததாக
அவர் சொன்னார்.
விடியற்காலை 4.19 மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட
வேளையில் கட்டிட இடிபாடுகளில் ஆங்காங்கே காணப்படும்
தீப்பொறிகளை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு
வருகின்றனர் என்றார் அவர்.
தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதோடு 800 லிட்டர் அமோனியா
அடங்கிய டாங்கியின் வால்வுகள் அடைக்கப்பட்டு அந்த வாயுவின் பரவில்
குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளபட்டு வருகிறது என்று அவர் கூறினார்.


