கேலாங் பாத்தா, ஜூலை 10 - இன்று காலை அரச மலேசிய போலீஸ் படைக்குச்
சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
ஜோகூர் பாருவிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுங்கை பூலாயில் பலதரப்பு அணுசக்தி பாதுகாப்பு கண்டறிதல் பயிற்சியை இன்று காலை மேற்கொண்டிருந்த போது இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.
மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பயற்சி நடைபெற்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் 9எம்-பிஎச்ஜி பதிவு எண் கொண்ட ஹெலிகாப்படர் ஒன்று விபத்தில் சிக்கியதை மலேசிய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (சிஏஏஎம்) அறிக்கை ஒன்றில் உறுதிப்படுத்தியது.
அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர் ஐந்து பயணிகளுடன் தஞ்சோங் குப்பாங் போலீஸ் நிலையத்திலிருந்து இன்று காலை 9.51 மணியளவில் புறப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
இந்த ஒத்திகைப் பயிற்சி நிகழ்வுக்கு செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களும் இந்த விபத்தை நேரில் கண்டனர்.


