ஷா ஆலம், ஜூலை 10 - பொது உள்கட்டமைப்பிற்கான பசுமையான, செலவு குறைந்த தீர்வாக சூரிய சக்தியில் இயங்கும் எல்.இ.டி. தெருவிளக்குகளின் பயன்பாட்டை சிலாங்கூர் அரசாங்கம் விரிவுபடுத்தவிருக்கிறது.
பசுமையும் அடிப்படை வசதிக்கான தீர்வாகவும் சோலார் விளக்குகள் விளங்குவதால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.
சிலாங்கூர் பெர்சஹாயா (ஒளிரும் சிலாங்கூர்) திட்டத்தின் மூலம் இவ்வாண்டு 350க்கும் மேற்பட்ட உயர் தரத்திலான சூரிய ஒளியீர்ப்பு விளக்குகள் நிறுவப்படுவதாக அவர் கூறினார்.
ஐந்து வருட உத்தரவாதத்துடன் வரும் இந்த விளக்குகளைப் பயன்படுத்துவது மின்சக்தி மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கும். மேலும், சேதம் மற்றும் கேபிள் திருட்டைத் தடுக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வகை தெருவிளக்குகள் அதன் நவீனத்தன்மை, மறைக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் குறைந்தபட்ச பராமரிப்பு காரணமாக கீழறுப்பு வேலைகளைக் தடுக்க உதவுகிறது. இது கேபிள் திருட்டை உட்படுத்திய பரவலான பிரச்சனையையும் நிவர்த்தி செய்கிறது. ஏனெனில் இது மின்கம்பி இணைப்பை நம்பியிருக்காது என்றார் அவர்.
முன்பு இந்த விளக்குகளை வாங்குவதற்கான செலவு அதிகமாக இருந்தது. ஆனால் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. சில சோலார் விளக்குகள் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளை விட மலிவானவை என்று அவர் இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் கூறினார்.
குறிப்பாக கேபிள் திருட்டு அதிகமுள்ள இடங்களில், இந்த விளக்குகளைக் கொண்டு சாலைகளை ஒளிரச் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதோடு காலாவதியான உள்கட்டமைப்பை படிப்படியாக மாற்றி வருவதாக இஷாம் கூறினார்.


