ஷா ஆலம், ஜூலை 10 - தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்கல்வி (திவேட்) திட்டங்களின் பட்டதாரிகள் தொடர்பான தரவுத்தளத்தை உருவாக்கும் முயற்சியில் கல்வி அமைச்சு மற்றும் சமூகக் கல்லூரிகளுடன் சிலாங்கூர் அரசு இணைந்து செயல்படும்.
சிலாங்கூர் திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (எஸ.டி.டி.சி.) வாயிலான ஒத்துழைப்பு சிலாங்கூர் மாநிலத்தில் வழங்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் மனித வளத் திறன் வாய்ப்புகளை பெறுவதை எளிதாக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பட்டதாரி மாணவர்களுக்கான விண்வெளித் துறை போன்ற திறன்களை மேம்படுத்துவதற்காகக் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிலாங்கூர் தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் முன்னெடுப்பை (இக்திசாஸ்) சிலாங்கூர் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு விமானப் பொறியியல் பயிற்சி வழங்கும் போலிடெக்னிக் கல்லூரிகளும் இங்கு உள்ளன.
விரிவான ஒத்துழைப்பின் அவசியத்தை நாங்கள் காண்கிறோம். மேலும் எஸ் டி.டி.சி. மூலம் கல்வி அமைச்சு மற்றும் சமூகக் கல்லூரிகளுடன் இணைந்து ஒரு தரவுத்தளத்தை உருவாக்குவோம் என்றார் அவர்.
இந்த தரவுத்தளம் அனைத்து பட்டதாரிகளையும் உள்ளே வரும் முதலீட்டாளர்களுடன் ஒன்றிணைக்கும். இதன் வழி சிலாங்கூரில் வழங்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் மனித வளங்களின் திறன்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். இந்த திட்டம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்போது சமர்ப்பிக்கப்படும் என்று அவர் இன்று கூறினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது திறன்களுக்கு ஏற்ப திவேட் பட்டதாரிகளுக்கான தரவுத்தளம் அமைப்பது குறித்து சுங்கை பூரோங் உறுப்பினர் டாக்டர் முகமது ஜம்ரி முகமட் ஜைனுல்டின் எழுப்பியக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பட்டதாரிகளுக்கு திவேட் துறையை முக்கிய தேர்வாக மாற்றுவதற்கான முயற்சிகளை மாநில அரசு தற்போது தீவிரப்படுத்தி வருவதாக அமிருடின் தனது பதிலில் தெரிவித்தார்.


