கோலாலம்பூர், ஜூலை 10 - OPR எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில், 25 அடிப்படை புள்ளிகளைக் குறைத்து, 2.75 விழுக்காடாகக் குறைப்பதற்கு பேங்க் நெகாரா மலேசியா முடிவு செய்துள்ளது.
இவ்வாண்டில் நடத்தப்பட்ட நான்காவது கூட்டத்தில், பேங்க் நெகாரா மலேசியா, BNM-இன், நாணயக் கொள்கை குழு, MPC இம்முடிவை செய்துள்ளது.
இவ்வாண்டில் OPR-யின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விகிதங்கள் முறையே 3 மற்றும் 2.5 விழுக்காடாக இருந்தன.
உள்நாட்டுப் பொருளாதாரம் நிலையாக இருந்தாலும், வெளிப்புற முன்னேற்றங்களைச் சுற்றியுள்ள நிலையற்ற தன்மைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று BNM வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
எனவே, OPR விகிதத்தின் குறைப்பு, மிதமான பணவீக்கக் கண்ணோட்டத்திற்கு மத்தியில் நாட்டின் நிலையான வளர்ச்சி சூழலை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகும்.
இதனிடையே, உள்நாட்டு வளர்ச்சி மற்றும் பணவீக்கக் கண்ணோட்டம் தொடர்பான அண்மைய முன்னேற்றங்களைக் கண்காணித்து, அதன் பாதிப்புகளை மதிப்பிடுவதாக, நாணயக் கொள்கை குழு உறுதியளித்துள்ளது.
-- பெர்னாமா


