பெட்டாலிங் ஜெயா, ஜூலை 10 : கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் அறிமுக வார நிகழ்வில் புதிய மாணவர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 343 நபர்கள் நச்சு உணவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
சால்மோனெல்லா பாக்டீரியா தான் இந்த தொற்றுநோய்க்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் சைனி ஹுசின் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி மற்றும் காய்ச்சல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக தென்பட்டன," என்று அவர் கூறினார்.
முதல் நாள் இரவு உணவின் போது, வெளியிலிருந்து தருவிக்கப்பட்ட கேட்டரிங் உணவுகளில் கோழிக் கழி பரிமாறப்பட்டுள்ளது. அந்த கோழி கறியில் குடல் பாதிப்பை ஏற்படுத்தும் salmonella பாக்டீரியா கிருமி இருந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 134 பேர் சிகிச்சைப் பெற வந்தபோது நச்சுணவுப் பாதிப்பு உறுதியானது. எஞ்சியர்களிடம் நடத்தப்பட்ட, உடனடி நோய் கண்டறிதலின் போது அப்பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


