(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 10 - இங்குள்ள புக்கிட் கெமுனிங் சாலை கடந்த 30
ஆண்டுளாக முறையான பராமரிப்பின்றி இருப்பது தொடர்பில் கோத்தா
கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் நேற்று முன்தினம்
வெளியிட்ட காணொளி, சமூகத்தின் மத்தியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்திய நிலையில் பொதுப்பணித் துறையின் அதிகாரிகள் நேற்று
பாதிக்கப்பட்ட பகுதியில் களமிறங்கினர்.
சாலையோரம் உள்ள கால்வாய்கள் துரிதகதியில் துப்புரவு செய்யப்பட்டதோடு சாலைகளிலும் மையக் கோடுகள் அமைக்கும் பணியும் இரவோடு இரவாக மேற்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்திற்கு நேற்று வருகை புரிந்து பொதுப்பணி அதிகாரிகள்
மேற்கொண்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்ததாகத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கூறினார்.
கோத்தா கெமுனிங் குறிப்பாகப் புக்கிட் கெமுனிங் வட்டார மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்ட கிள்ளான் பொதுப்பணி இலாகா மற்றும் பொதுப்பணி அமைச்சுக்கு தாம்
நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்ட பதிவொன்றில் தெரிவித்தார்.
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷின் அந்த காணொளிப்
பதிவைத் தொடர்ந்து நேற்று பல்வேறு பராமரிப்பு பணிகள்
முன்னெடுக்கப்பட்டதாக ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்
யோகேஸ்வரி சாமிநாதன் தெரிவித்தார்.
சாலையோரம் மண்டிக்கிடந்த புற்களை வெட்டியது, கால்வாய்களை சுத்தம்
செய்தது மற்றும் சாலையில் மையக்கோடுகளை அமைத்தது போன்றவை
புக்கிட் கெமுனிங் சாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளாகும் என அவர்
தெரிவித்தார்.
சாலை விளக்குகளை சரி செய்யும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும்
என்றும் ஒத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் பல புனரமைப்பு பணிகள்
விரைவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தங்களிடம்
வாக்குறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
புக்கிட் கெமுனிங் வட்டார மக்களின் நலன் கருதி பராமரிப்பு பணிகளை
விரைந்து மேற்கொணட் அதிகாரிகளுக்கு இப்பகுதிக்கு பொறுப்பான மாநகர்
மன்ற உறுப்பினர் என்ற முறையில் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக
அவர் சொன்னார்.
புக்கிட் கெமுனிங் சாலை சீரமைக்கப்படாதது, கல்வாய்கள் துப்புரவு செய்யப்படாதது மற்றும் தெரு விளக்குகள் எரியாதது, உள்ளிட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் நேற்று முன்தினம் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இப்பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோரி பொதுப்பணி அமைச்சர் மற்றும் மாநிலப் பொதுப்பணி இலாகா இயக்குநருக்கு அனுப்பிய மனுக்கள் சற்றும் பொருட்படுத்தப்படாத நிலையில் வேறு வழியின்றி மிகவும் கடுமையான தொனியில் அந்த காணொளியை அவர் வெளியிட்டார்.
அந்த காணொளி மக்கள் மத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு வட்டார
குடியிருப்பாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.


