ஷா ஆலம், ஜூலை 10 - கிள்ளானில் உள்ள சுங்கை காப்பார் கெச்சில் ஆற்று
நீர் நீல நிறமாக மாறியதற்கு காரணமான இரு இடங்களை சிலாங்கூர்
மாநில நீர் மேலாண்மை வாரியம் (லுவாஸ்) அடையாளம் கண்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 6) மற்றும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8)
ஆகிய இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நீர் மாசுபாட்டிற்கு
காரணமான அந்த இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்று தனது சேமிப்புக்
குளத்திலிருந்த கழிவுகளை சிறப்பு பம்ப் கருவிகளைப் பயன்படுத்தி
ஆற்றில் வெளியேற்றியதும் அனுமதியின்றி ஆற்று நீரை
உறிஞ்சியெடுத்ததும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட
சோதனையில் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த தொழிற்சாலையை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மலேசிய இரசாயன துறையில் சோதனை நடத்துவதற்காக அந்த
கழிவுகளின் மாதிரி எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
நீர் வளங்களை மாசுபடுத்தியது மற்றும் அனுமதியின்றி ஆற்றிலிருந்து
நீரை உறிஞ்சியெடுத்தது ஆகிய குற்றங்களுக்காக 1999ஆம் ஆண்டு
லுவாஸ் சட்டத்தின் 79(4) மற்றும் 104(பி) ஆகிய பிரிவுகளின் கீழ்
விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில்
ஆற்று நீர் மாசுபடுவதற்கு நீல நிற ரப்பர் திரவத்தை சேமித்து
வைத்திருந்த மற்றொரு வளாகம் அடையாளம் காணப்பட்டது.
அந்த டாங்கியின் மூடியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அந்த திரவம்
கால்வாயில் வழியாக சுங்கை கெச்சில் ஆற்றில் கலந்தது என்று அவர்
சொன்னார்.
அந்த வளாகம் கழிவு நீர் சேகரிப்பு குள வசதியைக் கொண்டிருக்கவில்லை.
இதன் காரணமாக மாசுபாடு ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் வெளியேற்றத்தை
உடனடியாக தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் துப்புரவுப் பணிகளை
மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட வளாகத்திற்கு லுவாஸ் உத்தவிட்டுள்ளது
என்றார் அவர்.


