சுபாங் ஜெயா, ஜூலை 10 - இவ்வாண்டு ஆசியான் தலைமையை ஏற்றுள்ள மலேசியா நடத்தும் 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை (ஏஎம்எம்) முன்னிட்டு நடைபெறும் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று கோலாலம்பூர் வந்தடைந்தார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் பதவியேற்ற ரூபியோ ஆசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். செவ்வாய்க்கிழமை முதல் நாளை வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் ஆசியான் தலைமையிலான கூட்டத்தில் அமெரிக்கக் பேராளர் குழுவுக்கு ரூபியோ தலைமையேற்கிறார்.
அமெரிக்க பேராளர் குழு பயணம் செய்த விமானம் இன்று காலை 7.39 மணிக்கு இங்குள்ள அரச மலேசிய விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.
அவர்களை வெளியுறவு அமைச்சின் சிறப்புப் பணிகளுக்கான துணைச் செயலாளர் டத்தோ சைட் முகமது பக்ரி சைட் அப்துல் ரஹ்மான், மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் எட்கார்ட் டி. ககன் மற்றும் ஆசியானுக்கான அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் கேட் ரெபோல்ஸ் ஆகியோர் வரவேற்றனர்.
ஆசியான்-அமெரிக்காவின் பிந்தைய அமைச்சர்கள் மாநாடு, கிழக்காசிய உச்சநிலை மாநாடு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் ஆசியான் பிராந்திய மன்றம் (ஏஆர்எஃப்) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஆகியவற்றில் ரூபியோ பங்கேற்பார் என அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது.
அவர் தனது பயணத்தின் போது மூத்த மலேசிய அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகளையும் நடத்த உள்ளார்.
கடந்த 1977, 1997, 2005 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஐந்தாவது முறையாக இவ்வாண்டு அந்த அமைப்புக்கு மலேசியா தலைமை தாங்குகிறது.


