ஷா ஆலம், ஜூலை 10 - காஜாங், சுங்கை தங்காஸில் உள்ள கால்நடை பண்ணை நடத்துநர் அரசு நிலத்தில் மேற்கொள்ளும் திறந்தவெளி தீயிடல் நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அதிகாரிகள் நேற்று ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து திறந்தவெளியில் தீயிடுவது தொடர்பாக குடியிருப்பாளர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சியாரெட்சான் ஜோஹன் தெரிவித்தார்.
அரசு நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்ததற்கான குற்ற அறிக்கை, வளாகத்தை காலி செய்வதற்கான அறிக்கை மற்றும் திறந்தவெளி தீயிடலுக்கு தடை விதிக்கும் அறிவிப்புகள் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு வழங்கப்பட்டன.
இந்த ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள நடத்துநர்களை மையமாகக் கொண்டது. அந்த நபர் ஒரு கால்நடை பண்ணையை சொந்தமாக வைத்திருக்கிறார். மேலும் அந்தப் பகுதியில் அனுமதியின்றி கட்டமைப்புகளை அமைத்துள்ளார்.
சுங்கை தங்காஸ் சாலை ரிசர்வ் நிலம் மற்றும் இடுகாட்டு நிலம் சம்பந்தப்பட்ட நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும் ஆய்வு செய்யப்படும் என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இச்சோதனை நடவடிக்கையின்போது திறந்தவெளி தீயிடலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நடத்துநர் மீது சுற்றுச்சூழல் துறை 1974ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தியது.
அதே நேரத்தில் கழிவுநீர் வெளியேற்றக் குற்றங்களுக்காக காஜாங் நகராண்மைக் கழகத்தால் குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன.
நீண்ட காலமாகக் குடியிருப்பாளர்களைப் பாதித்து வரும் இந்தப் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்க அமைப்புகளும் நிறுவனங்களும் தொடர்ந்து பாடுபடும். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக்க ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என அவர் அப்பதிவில் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் உலு லங்காட் மாவட்ட மற்றும் நில அலுவலகம், சுற்றுச்சூழல் துறையின் காஜாங் கிளை, காஜாங் நகராண்மைக் கழகம், கால்நடை துறை, சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம், குடிமைத் தற்காப்புப் படை மற்றும் காஜாங் காவல்துறை ஆகியவை பங்கு கொண்டன.


