ஷா ஆலம், ஜூலை 10 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பில் மாநில அரசு வெள்ளை அறிக்கையை வெளியிடுவது அவசியமற்றது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அதற்கு பதிலாக, அச்சம்பவம் தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையை பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட குழு முழுமையாக ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அந்த குழுவின் மறுஆய்வு முடிந்ததும் அது குறித்து சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் வெளிப்படையாக விவாதிக்கலாம். வெள்ளை அறிக்கைக்கான கோரிக்கையைப் பொறுத்தவரை, சிறப்புக் குழுவின் ஆய்வு முடிவுகளை பின்னர் மதிப்பாய்வு செய்யலாம் என்று நான் நம்புகிறேன் என அவர் சொன்னார்.
ஆகவே, வெள்ளை அறிக்கை தேவையில்லை. நாம் குழுவின் அறிக்கையை மதிப்பாய்வு செய்து விவாதிக்கலாம். நமது சட்டமன்றம் வெளிப்படையாக செயல்படுகிறது. மேலும் (சிறப்புக் குழுவின்) அறிக்கையை நாங்கள் வழங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறினார்.
மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது எரிவாயு வெடிச்சம்பவம் குறித்த அறிக்கை மீதான விவாதத்தின் போது அமிருடின் பேசினார்.
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் தொடர்பில் சட்டமன்றக் கூட்டத் தொடரில் வெளிப்படையாக விவாதிப்பதற்கு ஏதுவாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் முன்மொழிந்தன.
இதற்கிடையில், எரிவாயு குழாய் தீ விபத்து தொடர்பான விசாரணை மாநில அரசின் தலையீடு இல்லாமல் சுயேச்சையாக நடத்தப்பட்டது என்று அமிருடின் வலியுறுத்தினார்.
அதன் அந்த அறிக்கையின் வெளிப்படைத்தன்மை மீது கேள்வி எழுப்புவோருக்கு, அவர்களே மதிப்பீடு செய்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார் அவர்.


