ஷா ஆலம், ஜூலை 9 - சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவம் குறித்த விவாதம், பொது பாதுகாப்பு பிரச்சனைகளை கையாள்வதில் திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையில் மாநில அரசு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுகிறது.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் ஒன்பது மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த விவாதம், ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறைகளையும் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை வெளிப்படையாக விவாதிப்பதற்கான தயார் நிலையையும் எடுத்துக்காட்டுவதாக சபாநாயகர் லாவ் வெங் சான் கூறினார்.
மந்திரி புசாரின் விளக்க விவாதத்தில் எட்டு அல்லது ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். பாண்டான் இண்டா உறுப்பினர் ( உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்) தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விளக்கமும் அளித்தார்.
இந்த புத்ரா ஹைட்ஸ் மீதான விவாதத்தின் போது மூன்று உறுப்பினர்கள் எழுந்து நிற்பார்கள் (குறுக்கிடுவார்கள்) என்று நான் எதிர்பார்க்கவில்லை. முன்பு அவர்கள் விவாதத்தில் பங்கேற்கும் விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் , அவர்கள் குறுக்கிட முடிவு செய்தனர். இது ஒரு நல்ல நடவடிக்கை. நான் அதை வரவேற்கிறேன் என்றார் அவர்.
இந்த சட்டமன்றக் கூட்டம் வெளிப்படையானது என்பதோடு நேரடியாகவும் ஒளிபரப்பப்படுகிறது. நாங்கள் மிகவும் பொதுவெளியில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் (கூட்டம்) சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படுகிறது என்று அவர் இன்று சட்டமன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இது இந்த சம்பவம் குறித்த விவாதத்தின் தரத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில் இருந்ததாகக் கூறிய அவர்,தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் வாதங்களுடன் ஆக்ககரமான பயனைத் தரும் வகையில் இந்த விவாதம் அமைந்தது என்றார்.


