கோலாலம்பூர், ஜூலை 9 - மலேசியர்கள் இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறனை மேம்படுத்தி கொள்ள இலவசப் பயிற்சிகளை இலக்கவியல் அமைச்சு வழங்குகிறது. இந்த பயிற்சியில் இந்திய சமூகம் கலந்துகொண்டு முழுமையாகப் பயனடைய வேண்டும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் ``MyDIGITAL Corporation`` இந்தப் பெருமுயற்சியை மேற்கொண்டிருக்கின்றது. இலக்கவியல் தொழில்நுட்ப அறிவின் வழி மக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதோடு, உலகளாவிய நிலையில் போட்டியாற்றல்மிக்கவர்களாகவும் விளங்க முடியும் என தாம் நம்புவதாக கோபிந்த் சிங் கூறினார்.
ரக்யாட் டிஜிட்டல் என்பது அரசாங்கத்தையும், Cybersecurity Malaysia, Intel, iTrain, Microsoft, Trainocate போன்ற தொழில்துறைக் கூட்டமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு திட்டமாகும்.
இதில் துறைசார் வல்லுனர்களும் அரசாங்க உயர்அதிகாரிகளும் இணைந்து செயல்படுவர். அதோடு துறைசார் வல்லுனர்களும் தனியார் நிறுவனங்களும் இலவசமாக இந்தப் பயிற்சிகளை வழங்குவதன் காரணத்தால் அதிகமான மலேசியர்கள் இதில் பங்குகொண்டு பயன் பெறலாம் என கோபிந்த் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேல்விவரங்களுக்கு rakyatdigital.gov.my. அகப்பக்கத்தை நாடலாம்.


