கோலாலம்பூர், ஜூலை 9 - "முதலில் வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்" என்ற கடன் அல்லது கொள்முதல் திட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மாணவர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சகம் நினைவூட்டுகிறது.
கடன் திட்டம் இருப்பது குறித்து தனது அமைச்சகத்திற்கு முதற்கட்ட தகவல் கிடைத்ததாகவும், பின்னர் அது அதிக வட்டி விகிதத்துடன் கூடிய கடனாக மாறப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தாங்களே அறியாமல் கடன் சுமையில் சிக்க வைக்கப்படுவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சாம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.
"பல தரப்பினர் என்னைத் தொடர்பு கொண்டு, அதிகரித்து வரும் இந்த கவலையளிக்கும் பிரச்சனை குறித்து தெரிவித்தனர்.
"நான் எந்த தரப்பினரையும் குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் பெறப்பட்ட புகார்கள் பல மாணவர்கள் அதிக அளவு கடனில் சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் இருப்பதாகக் காட்டுகின்றன," என்று அவர் கூறினார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடைபெற்ற 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் (AMM) தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
அத்தகைய திட்டத்தில் மாணவர்கள் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து விரிவான தகவல்களைப் பெற அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உயர்கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சாம்ப்ரி தெரிவித்தார்.


