குவாந்தான், ஜூலை 9 - இங்குள்ள பண்டார் இண்டரா மக்கோத்தா, ஜாலான் இண்ட்ரா மக்கோத்தா, 15/7 பகுதியில் குவாந்தான் ஆற்றில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட முகமது இஸிராப் டேனிஷ் ரஸ்மி என்ற அந்த சிறுவன் ஆற்றில் சிக்கிய மீன்பிடிக் கம்பியை வெளியே எடுக்க தண்ணீரில் இறங்கியப் பின்னர் நண்பர்களின் பார்வையிலிருந்து மறைந்து விட்டதாக நம்பப்படுகிறது என்று குவாந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது அட்லி மாட் டாவுட் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 7.30 மணிக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் மலேசிய குடிமைத் தற்காப்புப் படையுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
சம்பவக் கட்டுப்பாட்டுச் சாவடி அந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கையில் குவாந்தான் மாவட்டக் காவல் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் 10 உறுப்பினர்கள், தீயணைப்புத் துறையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் எட்டு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் சீரான தேடுதல் நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக சம்பவம் நடந்த இடத்தை பொதுமக்கள் அணுக வேண்டாம் என்றும் முகமது அட்லி அறிவுறுத்தினார்.


