ஷா ஆலம், ஜூலை 9- தொழில் திறன் மற்றும் தொழில்நுட்ப கல்வித்
திட்டத்தை (திவேட்) வலுப்படுத்த மாநில அரசு ஆண்டு தோறும் 1.2 கோடி
முதல் 1.6 கோடி வெள்ளி வரையிலான நிதியை ஒதுக்கீடு செய்து
வருகிறது.
சிலாங்கூர் தொழில்திறன் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மையம்
போன்ற திவேட் கல்விக் கூடங்களில் (எஸ்.டி.டி.சி.) மலேசிய திறன்
சான்றிதழ் பயிற்சி, நிபுணத்துவ திறன் பயிற்சி, மற்றும் குறுகியக் கால
திறன் பயிற்சிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஏற்பாடு ஆதரவை
வழங்குவதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்ற மனித வளத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
இது தவிர, திவேட் கல்வித் தொகுப்புகளை உருவாக்குதற்கு ஏதுவாக
உள்நாட்டு மற்றும் அனைத்துலக நிலையில் நிறுவனங்கள் மற்றும்
தொழிலதுறையினருடன் கூட்டு ஒருங்கமைப்புத் திட்டங்களை
செயல்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
திவேட் திட்டத்தை அமல்படுத்துவது மற்றும் எஸ்.டி.டி.சி. போன்ற கல்விக்
கூடங்களின் தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்ப அதன்
தரம் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் இருப்பதை உறுதி செய்வதை இது
நோக்கமாக கொண்டுள்ளது. இதன் மூலம் பயிற்சியாளர்கள்
தொழில்துறையின் உண்மையான பணிச்சூழலை எதிர்கொள்வதற்கு
தயாராக முடியும் என்றார் அவர்.
ஒவ்வோராண்டும் எஸ்.டி.டி.சி வாயிலாக 1,200 முதல் 1,500 வரையிலான
பயிற்சி பெற்ற மாணவர்கள் உருவாக்கப்படுவதாக மாநில சட்டமன்றத்தில்
அவர் குறிப்பிட்டார்.
இந்த கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக நிதியுதவி பெற
இந்தியர்கள் உள்பட தகுதி உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான
வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.
எஸ்.டி.டி.சி. கல்விக் கூடத்தில் பயிற்சி பெறுவதற்கு ஆண்டுதோறும்
விண்ணப்பம் செய்யும் மாணவர்களில் 30 முதல் 40 விழுக்காட்டினர்
இந்தியர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


