(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 9 - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்தின்
வளர்ச்சியை உறுதி செய்யக்கூடிய திட்டங்களை அமல்படுத்த மாநில அரசு
இவ்வாண்டு ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியின் வாயிலாக சமூக நலன், கல்வி, சமயம் மற்றும்
பொருளாதாரம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருவதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று கோத்தா டாமன்சாரா உறுப்பினர் முகமது
இஸூவான் காசிம் எழுப்பியக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு இவ்வாண்டு மாநில அரசு
ஒதுக்கியுள்ள நிதியில் இந்திய இளைஞர்களின் மேம்பாட்டிற்கு
முன்னெடுக்கபட்டுள்ள திட்டங்கள் மற்றும் திவேட் போன்ற தொழில்
திறன் பயிற்சித் திட்டங்களில் இந்திய இளைஞர்களின் பங்கேற்பை
அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இஸூகான்
கேள்வியெழுப்பியிருந்தார்.
இக்கேள்விகளுக்கு பதிலளித்த பாப்பாராய்டு, இந்தியர்கள்
உள்பட அனைத்து மாநில மக்களின் நலனிலும் மாநில அரசு அக்கறை செலுத்தி
வருவதோடு இதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டு ஒவ்வோராண்டும் பெரிய நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக
அமல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டு திட்டங்களுக்காக மாநில அரசு
இவ்வாண்டு பிரத்தியேகமாக 1 கோடியே 50 லட்சம் வெள்ளிக்கும் மேல்
ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் ஐ-சீட் எனப்படும் வர்த்தக உபகரண உதவித்
திட்டத்திற்கு பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு
மற்றும் குறு இந்திய தொழில் முனைவோர் தங்கள் வர்த்தகத்தை
விரிவாக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் நோக்கில் இந்த திட்டம்
முன்னெடுக்கபட்டுள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டு மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாக
வருமானம் பெறும் நிலையிலுள்ள சாலையேரங்களில் பலகாரங்கள்
விற்பனை செய்வோர், தையல் மற்றும் மெக்னிக் உள்ளிட்ட தொழில்களில்
ஈடுபட்டுள்ள 163 பேர் பயன் பெறுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது என அவர் சொன்னார்.
அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் டிப்ளோமா மற்றும்
பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் வசதி குறைந்த இந்திய
மாணவர்களுக்கான கல்விக் கட்டண உதவித் திட்டத்திற்கு மாநில அரசு 12
லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிள்ளைகளின் கல்வியை உறுதி செய்வதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும்
நிதிச் சுமையை இத்திட்டம் குறைக்க உதவும் என்பதோடு நிதி சிக்கல்
காரணமாக மாணவர்கள் கல்வியை பாதியில் கைவிடுவதையும் தடுக்கும்
என்றார் அவர்.
இந்த கல்வித் கட்டண உதவித் திட்டத்தின் வழி 2025ஆம் ஆண்டில் 486 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர 950,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி பேருந்து கட்டணம் வழங்கும் திட்டத்தையும் மாநில அரசு ஆண்டுதோறும் அமல்படுத்தி வருகிறது.
ஆண்டுக்கு 300 வெள்ளி தொகையை ஒரு முறை மட்டுமே வழங்க வகை செய்யும் இத்திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 3,166 மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்று பாப்பாராய்டு
கூறினார்.
இந்தியர்கள் சார்ந்த விழாக்களையும் மாநில அரசு மறக்கவில்லை.
தீபாவளி, தைப்பூசம், பொங்கல், உகாதி மற்றும் வைசாகி போன்ற சமய
நிகழ்ச்சிகளை மாநில அளவில் கொண்டாடுவதற்காக மாநில அரசு 800,000
வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
மேலும், பெருநாள் காலப் பற்றுச் சீட்டுத் திட்டத்தின் கீழ் தீபாவளி பண்டிகையின்
போது வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 22,130 பேருக்கு பற்றுச்
சீட்டுகளை வழங்க 4.43 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும்
அவர் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுன்றி மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளின் நலனையும்
மாநில அரசு புறக்கணிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர்,
பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கல்வி வளர்ச்சித்
திட்டங்களுக்காக ஆண்டுதோறும் 50 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீடு
செய்து வருகிறது என்றார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில் 50 விழுக்காடு பள்ளிகளில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் எஞ்சிய 50 விழுக்காடு
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துவதற்கும்
ஒதுக்கப்படும். தமிழ்ப்பள்ளிகளுக்கான நிதி வழங்கும் நிகழ்வு இம்மாத
இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறும் என்றார்
அவர்.
லீமாஸ் எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான
செயல்குழுவின் வாயிலாக ஆலயங்களுக்காக மாநில அரசு 16 லட்சத்து 50
ஆயிரம் வெள்ளியை வழங்கி வருகிறது. இந்த நிதி ஆலயங்களை
புரனமைப்பது, சமய நிகழ்ச்சிகளை நடத்துவது மற்றும் இடுகாடுகளைப்
பராமரிப்பது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றார் அவர்.
இந்தியர்களுக்கான இந்த பிரத்தியேகத் திட்டங்கள் தவிர்த்து ஐ.எஸ்.பி.
எனப்படும் சிலாங்கூர் பென்யாயாங் முன்னெடுப்பின் கீழ் இடம்
பெற்றுள்ள 40க்கும் மேற்பட்டத் திட்டங்கள் வாயிலாக இந்தியர்கள் உள்பட
அனைத்து இனத்தினரும் பயன் பெற முடியும் எனவும் பாப்பாராய்டு
சொன்னார்.


